தீவனத்தின் போது உணவாக நினைத்து நாட்டுவெடிகுண்டை கடித்து பசுவின்தாடை கிழிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள வேப்பங்குப்பம் பகுதியில் சினைப்பசு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. வழக்கமான புல்வெளி இடங்களில் மேய்ந்தபோது உணவாக நினைத்து நாட்டு வெடிகுண்டை பசு கடித்தபோது திடீரென வெடித்து சிதறியது. இதில் சினைப்பசுவின் தாடைகள் கிழிந்து பெரும் சேதம் அடைந்தன. இதனால் பசுவினால் உணவு உண்ணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் விலங்குகளை குண்டு வைத்து தாக்கும் விபரீத வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் யானை ஒன்றுக்கு அண்ணாசி பழத்தில் வெடிவைத்து பின்னர் அந்த யானை உணவு உண்ணமுடியாமல் தண்ணீரில் நின்று கடைசியில் உயிர்விட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியாக்கியது.
இதைத்தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் பசுவிற்கு கோதுமை மாவில் வெடிவைத்து அதன் வாய் சிதறிப்போன சம்பவமும் மக்களிடையே கடும் கோபத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது சினைப்பசுவின் தாடைகள் சேதமான பரிதாப சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாட்டு வெடிகுண்டு விற்பனையிலும், அதை பயன்படுத்துவதற்கும் புதிய சட்ட விதிமுறை அமல்படுத்தினால் நல்லதாக இருக்கும் என சமூக ஆர்வலர்களிடையே எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.