பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியது! யாரெல்லாம் இந்த தடுப்பூசியை போட்டு கொள்ளலாம்?
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் மருத்துவத்துறைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுவந்தது.
அதை தொடர்ந்து 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. அதன் பின்னர் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து தற்போது வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் விரிவுபடுத்தும் வகையில் கடந்த 3ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள 15 வயது முதல் 18 வயது உடைய சிறுவர், சிறுமிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே இந்த தொற்றிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், தொற்று பரவலை கட்டுபடுத்தவும் கடந்த மாத இறுதியில், சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் ஜனவரி 10ம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
மேலும் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 9 மாதங்களுக்கு பிறகு தான் இந்த பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி கோவின் இணையதளம் மற்றும் செயலி மூலம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான முன்பதிவு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
அதனை தொடர்ந்து சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆகியோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கி உள்ளது.