Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாங்கியது காய் பிரியாணி ஆனால் கிடைத்ததோ பூரான் பிரியாணி! சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஓட்டல் மீது அதிரடி நடவடிக்கை! 

#image_title

வாங்கியது காய் பிரியாணி ஆனால் கிடைத்ததோ பூரான் பிரியாணி! சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஓட்டல் மீது அதிரடி நடவடிக்கை! 

பிரியாணியில் பூரான் கிடந்ததால்  சாப்பிட்ட  4 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூரான் கிடந்த உணவை சாப்பிட்ட 4 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதிர்ச்சி தரும் இந்த சம்பவம் ஊட்டியில் நடைபெற்று உள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அடுத்துள்ள எம்.பாலாடா மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் கேரட் விவசாயம் நடைபெற்று வருகிறது. எனவே இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தினமும் எம்.பாலாடா பஜார் பகுதியில் உள்ள ஓட்டல்களில் தங்களுக்கு தேவையான உணவை வாங்கி சாப்பிட்டு வந்தனர்.

இதையடுத்து எம்.பாலாடா அருகிலுள்ள நரிக்குழியாடா என்ற பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் நேற்று அந்த பகுதியில் உள்ள மம்மி மெஸ் என்ற ஓட்டலில் 4 பிரியாணிண வாங்கியுள்ளார். அதை கிருஷ்ணசாமியும் அவருடன் கம்பெனியில் பணியாற்றியவர்களும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பிரியாணியை பாதி சாப்பிட்டு முடித்த பின்னர், தியாகராஜன் என்பவரின் பிரியாணியில் அடிப்பகுதியில் பூரான் ஒன்று இறந்து கிடந்துள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமி, தியாகராஜன் உள்பட 4 பேருக்கும் வாந்தி, மயக்கம் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் எம்.பாலாடாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஓட்டலில் கேட்டபோது ஓட்டல் நிர்வாகத்தினர் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆதலால் இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் நந்தகுமார், சிவராஜ் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று அந்த ஓட்டலில் ஆய்வு செய்தனர்.  

அதில் அந்த ஓட்டலில் இட வசதி இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டது.  எனவே சுகாதாரமற்ற முறையில் உணவு பொருள் தயாரித்து விற்பனை செய்த காரணத்திற்காக அந்த ஓட்டலுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட பிரிவு 55-இன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும்  சமையல் அறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி உணவு பொருட்களை முறையாக  மூடிய நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டது. இனிமேல் வரும் காலங்களில் இது போல் தவறுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Exit mobile version