Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

BREAKING நாளை முதல் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பரவத் தொடங்கியது. அதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து நோய்த் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்து வந்ததால் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. அரியர் மாணவர்கள் கூட ஆல் பாஸ் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டார்.

college

ஓராண்டாக வீட்டிற்குள் முடங்கி கிடந்த மக்கள் கடந்த அக்டோபர் மாதம் முதலே சற்று இயல்பு நிலைக்கு திரும்பினர். இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கும், ஜனவரியின் தொடக்கத்தில் இருந்து பிற ஆண்டு மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு எழுத உள்ள 9,10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி, கைகளை நன்றாக கழுவி தூய்மைப்படுத்திக் கொள்ளுதல், வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கொரோனா விதிமுறைகளுடன் பள்ளி, கல்லூரிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று, தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி இருக்கிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே தொற்று பரவல் அதிகமாக ஏற்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை நிபுணர்களின் அறிவுறுத்தலின் படி பொதுத்தேர்வு காரணமாக பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட்ட 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத பள்ளிகள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

சட்டப்பேரவையில் ஏற்கனவே 110 விதிகளின் கீழ் 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக முதலமைச்ச அறிவித்திருந்த நிலையில், தற்போது வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்றும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு காரணமாக வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுஉத்தரவு வரும் வரை பள்ளிகளை மூட உத்தரவிட்டதன் தொடர்ச்சியாக, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அடுத்தகட்டமாக என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் முடிவில், தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு 6 நாட்கள் ஆன்லைன் வழியில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும்,  செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் வழியாகவே நடத்தப்படும் என்றும் உயர் கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Exit mobile version