கடந்த ஆண்டு முழுவதிலும் பரவி மக்களை வாட்டிய கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் எடுத்த தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கையால் 2020 ம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது. அதன் தொடர்ச்சியாக 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பரவலுக்கான தடுப்பூசி செயல்பட்டிற்கு வந்தது.
இந்த நிலையில் மார்ச் மாதத்தில் இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. இதனால் மாநில அரசுகளுக்கு அறிக்கை அனுப்பிய மத்திய அரசு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தியது. சில இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதே நேரத்தில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறையைப் போலவே இந்த முறையும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான், மாதவன் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழில் ‘மாநகரம்’ திரைப்படம் மூலம் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த லோகேஷ் கனகராஜுக்கு கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்பட்ம மாபெரும் ஹிட்டாக அமைந்தது. மூன்றாவது படமாக தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கூட்டணியில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். 50 நாட்களைக் கடந்து ஓடிய மாஸ்டர் திரைப்படம் வசூல், விமர்சன ரீதியாக சாதனை படைத்தது.
தற்போது கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்த லோகேஷ் கனகராஜுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்’என்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர், நலம்விரும்பிகள் அனைவருக்கும் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் நல்ல உடல் நலத்துடன் மீண்டு வருவேன்’ என பதிவிட்டுள்ளார்.