#BREAKING தமிழகத்தில் 9,10,11ம் வகுப்புகளுக்கு விடுமுறை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

0
132
School

தமிழகத்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வந்ததை அடுத்து டிசம்பர் 28ம் தேதி நடந்த மருத்துவ நிபுணவர்கள், ஆட்சித்தலைவர்கள்\, சுகாதாரத்துறையின் வல்லுநர்களின் ஆலோசனையின் படி, பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ம் தேதி அன்றும், 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதலும் பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் செயல்படவும். அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் முதல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்த கொரோனா தொற்று தற்போது வேகமெடுத்துள்ளது. இம்மாத தொடக்கம் முதலே பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் மொத்தம் 11 பள்ளிகளில் 98 மாணவர்களுக்கும், தாம்பரத்தில் 3 ஆசிரியர்களுக்கும், திருச்சி மண்ணச்சநல்லூரில் பள்ளி மாணவர்களுக்கும் என அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மார்ச் 22ம் தேதி முதல் 9,10,11ம் வகுப்புகளுக்கு மார்ச் 22 முதல் மறு உத்தரவு வரும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகளின் விடுதிகளை மூடவும், ஆன்லைன் வகுப்புகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் சில மாவட்டங்களில் சிறிய அளவில் இந்த தொற்று பள்ளிகளில் கண்டறியப்பட்டு வருகிறது என்றும் ஒட்டுமொத்த நாள் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இந்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை குறைந்த அளவில் காணப்பட்டாலும், தற்போது கோவிட் தொற்று பரவும் சூழ்நிலையில் இந்த பள்ளிகளில் ஏற்பட்டுள்ள கோவிட் கூட்டுத் தொற்றால் (COVID School Clusters) அவர்கள் வசிக்கும் குடியிருப்புகளில் பரவி பன்மடங்கு அந்தப் பகுதியில் மட்டுமல்லாமல் அந்த மாவட்டத்திலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று பொது சுகாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனை உடனடியாக தடுக்க, 9-ஆம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளை நடத்த வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளார். மேலும், 12-ஆம் வகுப்பு மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளதாலும், அவர்கள் பொதுத் தேர்வை எழுத வேண்டி உள்ளதாலும், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளைப் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் 12ஆம் வகுப்பை தொடர்ந்து நடத்த அனுமதிக்கலாம் என்றும், இவர்களுக்கான விடுதிகளையும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரின் பரிந்துரைகளை ஏற்று, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளோடு ஆலோசிக்கப்பட்டு கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது.

கோவிட் தொற்று அதிகரித்து வருவதாலும், கோவிட் தொற்றால் மாணவர்களும் அதனால் பொதுமக்களும் பாதிக்கக்கூடாது என்பதாலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி வரும் 22.3.2021 தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள 9, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளை இவர்களுக்கான விடுதிகளும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு இணையவழி / டிஜிட்டல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்.

மேலும், தமிழ்நாடு மாநில வாரியம் தவிர மற்ற வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அத்தேர்வு வாரியங்களால் அறிவிக்கப்பட்டுள்ளபடி நடைபெறும். இப்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அவர்களுக்கான விடுதிகள் இயங்கவும் அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. 

.