Breaking தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஊரடங்கு? தமிழக அரசு தீவிர ஆலோசனை!

0
182
Lock down

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவையே உலுக்கிய கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த கடும் உத்தரவுகளால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கினர். அனைத்து விதமான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கல்லூரி, பள்ளி மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் மூலம் கல்வி கற்றனர். இப்படி கோரதாண்டவம் ஆடிய கொரோனா தொற்றின் தாக்கம் ஜனவரி மாதம் முதல் கட்டுக்குள் வர ஆரம்பித்தது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவாக்சின், கோவிட்ஷீல்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து ஜனவரி மாதத்தில் இருந்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கொரோனா தொற்றின் மீதான மக்களின் பயம் நாளுக்கு நாள் குறைந்து வந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்றின் வேகம் காட்டுத்தீ போல் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரத்து 194 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 79 ஆயிரத்து 473 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், 1,270 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

உச்சகட்டமாக நேற்று சென்னையில் 833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தொற்றின் பரவல் தீவிரமடைந்து வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றால் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஊரடங்கு பிறப்பிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஏப்ரல் 2வது வாரம் முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் இரவு நேர ஊரடங்கு, தனியார் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்த படியே வேலை செய்ய வலியுறுத்துவது உள்ளிட்டவை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் அதிகம் காணப்படும் சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பொழுது போக்கு தளங்கள், பொது போக்குவரத்து ஆகியவற்றில் மீண்டும் கட்டுபாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.