திறக்கப்பட்ட 3 மாதத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்! தரம் குறித்து பொதுமக்கள் சந்தேகம்

0
120
Bridge swept away in 3 months of opening! Public doubts about quality

வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள பெரும்பாலான பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் ஏற்படும் சேதமானது அதிகரித்து வந்த நிலையில் அதை எதிர்கொள்ளும் விதமாக தமிழக அரசும் தயாராகி வந்தது.

இந்நிலையில் அனைவருக்கும் போக்கு காட்டும் வகையில் இந்த முறை உருவான பெஞ்சல் புயல் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளான பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் அதிக சேதாரத்தை உண்டாக்கியுள்ளது.

அந்த வகையில் புயல் பாதிப்பால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் திருவண்ணாமலையில் பயன்பாட்டுக்கு வந்த 3 மாதங்களில் பாலம் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அகரம் பள்ளிப்பட்டு மற்றும் தொண்டமானூர் உள்ளிட்ட கிராமங்களை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டது. தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பாக நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் தென் பெண்ணையாற்றின் குறுக்கே சுமார் 15 கோடி மதிப்பில் இந்த பாலமானது கட்டப்பட்டது.

அந்த வகையில் இந்த பாலம் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி அமைச்சர் ஏ.வா வேலு அவர்களால் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் பெஞ்சல் புயலால் உருவான வெள்ளப்பெருக்கில் இந்த பாலமானது அடித்து செல்லப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு 3 மாதங்களில் வெள்ள நீரில் அடித்து செல்லப்படும் வகையில் கட்டப்பட்ட இப்பாலத்தின் தரம் குறித்து பொது மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். இந்த அளவுக்கா ஊழல் செய்வார்கள் என பலரும் ஆளும் அரசை விமர்சித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் இப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது குறித்து ஆளும் அரசு சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. அதில் வழக்கமாக இந்த ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை பொறுத்தே பாலம் கட்டப்பட்டதாகவும், பெஞ்சல் புயலால் வழக்கத்துக்கு அதிகமான வெள்ளம் வந்ததால் பாலத்தின் மேல் 4 அடி உயரத்தில் தண்ணீர் சென்றதால் பாலம் அடித்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.