ஸ்டாலினின் அரசியல் நாடகத்தை முடித்து வைத்த பாஜக நிர்வாகி
பாஜகவில் பதவியில் இருந்து கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜகவின் மாநில துணைத் தலைவர் அரசக்குமார் நாம் அனைவரும் எதிர்பார்த்தப்படியே திமுகவில் இணைந்துள்ளார்.
கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினரான பெரியண்ணன் அரசு இல்லத் திருமண விழாவில் பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவராக இருக்கும் பி.டி.அரசகுமார், “எம்.ஜி.ஆருக்குப் பிறகு நான் ரசித்த தலைவர் தளபதி ஸ்டாலின் தான். அவர் விரைவில் முதல்வர் அரியணையில் ஏறுவார்” என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் புகழ்ந்து பேசியிருந்தார்.
இதற்கு பாஜக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால், தான் சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது எனவும், தன்னுடைய தனிப்பட்ட உணர்வைத்தான் வெளிப்படுத்தியதாகவும்,எந்த நடவடிக்கை எடுத்தாலும் எதிர்கொள்ளத் தயார் என்றும் அரசகுமார் இதை சமாளிக்கும் விதமாக பதிலளித்திருந்தார்.
இதனையடுத்து சர்ச்சை கருத்தை கூறிய அரசகுமார் மீது தலைமை நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக பாஜக பொதுச் செயலாளர் நரேந்திரன் கடிதம் அனுப்பியிருந்தார், மேலும் கட்சியின் தேசிய தலைமையிடமிருந்து இதற்கான பதில் வரும் வரை பி.டி.அரசகுமார் கட்சி சார்பில் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்தவாறே சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த பி.டி.அரசகுமார் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டார்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பி.டி.அரசகுமார், “என்னுடைய தாய் வீட்டிற்கு வந்துள்ளேன். இனியும் பொறுத்திருக்க வேண்டாம், நீங்கள் இணையும் நேரம் நெருங்கிவிட்டது என திமுக முன்னணி தலைவர்கள் என்னை அழைத்ததன் பேரில் திமுகவின் இணைந்தேன். ஸ்டாலின் தலைமையில் திமுகவின் நல்லாட்சி அமைய இன்று முதல் என்னுடைய பயணம் தொடங்கும். பாஜக மீது விமர்சனத்தை முன்வைக்க நான் விரும்பவில்லை.
பிரதமர் மோடியையோ அல்லது தேசியத் தலைமையையோ குறைகூற நான் விரும்பவில்லை. தமிழக பாஜகவில் ஒரு சிலரை தவிர மற்றவர்களை வளரவிட மாட்டார்கள். மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பின் கேட்க முடியாத பல வார்த்தைகளை கேட்டேன். அதனால் மனச்சோர்வு அடைந்தேன். சுயமரியாதையை இழக்க தயாராக இல்லை. அது பாஜகவில் எனக்கு ஏற்பட்டதால் திமுகவில் இணைந்தேன். என்னை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு மற்றவர்கள் தங்களது முடிவுகளை மேற்கொள்வார்கள்” என்றும் அவர் கூறினார்.
ஒரு கட்சியில் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் சம்பந்தமே இல்லாமல் அந்த கட்சிக்கு எதிரான நபரை புகழ்வது போல பேசி ஏற்கனவே திட்டமிட்டபடி இதையே ஒரு காரணமாக வைத்து அந்த கட்சியில் இணைந்துள்ளார். இதன் மூலமாக திமுக தலைவர் நடத்திய அரசியல் நாடகத்தை இவர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.