உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த கர்நாடக வீரர்..! மக்களை வியக்க வைத்த வேகம்!

0
176

உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த கர்நாடக வீரர்..! மக்களை வியக்க வைத்த வேகம்!

கர்நாடக மாநிலத்தின் கடற்கரையோர மாவட்டத்தில் இருக்கும் “கம்பளா” என்ற பெயரில் எருமை மாட்டு பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. இது கர்நாடக மக்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இத்திருவிழா “தட்சிணா கன்னட கம்பளா கமிட்டி” என்ற குழு தலைமையில் நடைபெறுகிறது.

தட்சிண கன்னட மாவட்டம் மூடாபித்ரி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் கவுடா (28) என்ற இளைஞர் எருமை மாட்டு பந்தயத்தில் மிக குறுகிய நேரத்தில் பந்தய நேரத்தை கடந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். நூறு மீட்டருக்கும் சேறு கலந்த தண்ணீரில் எருமை மாட்டுடன் வேகமாக ஓட வேண்டும் என்பது விளையாட்டின் விதிமுறையாகும். இவர் 142.5 மீட்டர் தொலைவை 13.62 நொடியில் ஓடி சாதித்துள்ளார். இந்த தூரத்தை தரையில் ஓடுவது எளிது, தண்ணீர் கலந்த சேற்றில் எருமை மாட்டுடன் ஓடுவது மிக சவாலான விஷயமாகும்.

மேலும், பந்தயத்தில் 100 மீட்டர் ஓட வேண்டிய இலக்கை வெறும் 9.55 நொடிகளில் கடந்து சாதித்துள்ளார். இது உலக மின்னல் மனிதன் என்று சொல்லப்படும் ஜமைக்காவின் ஓட்டப்பந்தய வீரர் “உசைன் போல்ட்டின்” வேகத்தை விட அதிகம். உசைன் போல்ட் 100 மீட்டர் தொலைவை 9.58 நொடிகளில் கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. போல்ட்டின் உலக சாதனையை ஸ்ரீனிவாஸ் கவுடா முறியடித்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இரண்டு மாடுகளை ஏர் போல பூட்டி சகதி நிறைந்த தண்ணீரில் வேகமாக விரட்டி குறைந்த நொடிகளில் இலக்கை எட்டுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. கம்பளா என்னும் வேளாண்மை சமூகத்தை சேர்ந்த மக்கள் இந்த பந்தய போட்டியில் மிக கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். மங்களூரை ஆண்ட அலுப்பா மன்னர்கள் காலத்தில் இருந்தே கம்பளா போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.