Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பேருந்து சேவை – பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

தமிழகத்தில் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கான அரசாணையை மாநில தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டார்.

அந்த அரசாணையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிபந்தனைக்குட்பட்டு அனுமதிக்கப்படுகின்றன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்து கிடையாது.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் ஆகியோர் மருத்துவ காரணங்கள் மற்றும் அவசர தேவைகளுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வரலாம்.மேலும் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்தி தொற்றுக்கு விலகி கொள்ள வேண்டும். பணியிடங்களில் இந்த செயலியை அனைத்து ஊழியர்களும் பதிவிறக்கம் செய்து கொண்டு பாதுகாப்பாக இருக்கலாம்.

பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும். பொது இடங்களில் மது அருந்துவது, பான், குட்கா, புகையிலை ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் நகர பேருந்துகளில் டிக்கெட், பண பரிமாற்றத்தை தவிர்க்க பயணிகளுக்கு மாதாந்திர பாஸ்களை வழங்க வேண்டும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வசதிகள் இல்லாத பயணிகளுக்கு மட்டும் டிக்கெட்களை வழங்க வேண்டும்.

பஸ் புறப்படும் முன்பும், வந்து சேர்ந்த பின்பும் சுத்தமாக கழுவப்பட வேண்டும்.பயணிகள் பின்பக்க வாசல் மூலம் ஏறவும், முன்பக்க வாசல் மூலம் இறங்கவும் வேண்டும். ஒவ்வொரு பேருந்திலும் பயணிகள் வசதிக்காக ‘சானிடைசர்’ வைக்கப்பட வேண்டும். ஏ.சி. எந்திரங்களை பஸ்களில் இயக்கக் கூடாது. எந்த இருக்கையில் பயணி உட்கார வேண்டும், எது காலியிடமாக வைக்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

பேருந்து ஓட்டுனர், நடத்துனரின் உடல்வெப்பத்தை தினமும் சோதிக்க வேண்டும். முககவசம், கையுறையை அணிய வேண்டும். பேருந்தில் ஏறும்போது பயணிகளை முககவசம் அணியவும், சானிடைசரை பயன்படுத்தவும் அறிவுறுத்த வேண்டும்.

வரிசை பரிசோதனை ஆய்வாளர்கள், பஸ் நிறுத்தங்களில் அமர்த்தப்பட்டு, பயணிகள் குறிப்பிட்ட இடைவெளியை கடைபிடித்து பஸ்களில் ஏறுகிறார்களா? போதிய ‘சீட்’ வசதி இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். பயணிகள் கண்டிப்பாக வாய் மற்றும் மூக்கை முகக்கவசம் அல்லது துணியால் மூடியிருப்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டும்.

பேருந்தில் இருக்கைகள் இல்லாவிட்டால் பயணிகள் அடுத்த பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். இருமல், காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளுடன் யாரும் பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.பேருந்து நிறுத்தங்கள் அனைத்தும் சுத்திகரிக்கப்பட்டு இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். அனைத்து பேருந்து முனையம் மற்றும் நிறுத்தங்கள் ஒரு நாளைக்கு இரு முறை சுத்தப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவ்வரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version