சென்னையில் சிக்னலில் மாநகர பேருந்துகள் அதிக நேரம் நிற்பதை தவிர்க்கும் வகையில் புதிதாக பஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட இருப்பதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது. இதன் முதற்கட்டம் ஆலந்தூர் முதல் விமான நிலையம் வரை செயல்படுத்தப்படும் என்ற தகவலையும் தெரிவித்திருக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் மாநகர பேருந்துகள் நீண்ட நேரம் சிக்னலில் காக்க வேண்டி இருக்காது என்றும் பஸ் சிக்னல் முன்னுரை அமைப்பு எம்டிசி பேருந்து கண்டறிந்த அதனுடைய வழித்தடத்தில் இருக்கக்கூடிய சிவப்பு சிக்னலின் கால அளவை குறைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
ஒருவேளை சிக்னலின் அருகே மாநகர பேருந்துகள் இருக்கிறது என்றால் பச்சை நிற விளக்குகள் கூடுதல் நேரம் ஒளிரும் வகையிலும் சிக்னல்களில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றனர். மேலும் இதன் மூலம் பேருந்து போக்குவரத்து நெரிசலில் அதிக நேரம் காத்திருக்கும் நேரம் ஆனது குறையும் என்றும் பயணிகள் தங்களுடைய நேரத்தை மிச்சப்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி பேருந்தினுடைய எரிபொருள் செலவையும் இத்திட்டத்தின் மூலம் குறைக்கலாம் என்றும் மாநகரப் போக்குவரத்து கழகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வருகிற 2025 ஜனவரி மாதம் ஆலந்தூர் முதல் விமான நிலையம் வரை உள்ள ஜிஎஸ்டி சாலையில் செல்லக்கூடிய பேருந்துகளுக்கு இத்திட்டமானது அறிமுகப்படுத்தப்படும் என்று மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாநகர பேருந்துகளில் gps டிராகர்கள் பொருத்தக்கூடிய பணியும் சிக்னல் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தக்கூடிய பணியும் நிறைவடைந்த நிலையில் ஜனவரி மாதத்தின் இறுதிக்குள் இந்த திட்டம் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.