அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. இதில் உரிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாவிட்டால் உடனடியாக வேலை நிறுத்தம் ஆரம்பமாகும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுக்கும் விதமாக தெரிவித்திருக்கின்றன.
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வது போன்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கினர். இதனையடுத்து ஊதிய ஒப்பந்தம் குறித்து 6ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னையையடுத்த க்ரோம்பேட்டையிலிருக்கின்ற மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் இன்று நடைபெறவிருக்கிறது.
இந்த பேச்சுவார்த்தையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் உடனடியாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அதற்கான தீர்வைக் கண்டு, வேலை நிறுத்தத்தை தவிர்க்க வேண்டும் என போக்குவரத்து துறை ஊழியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்ருக்கிறது.