வேதனையில் பேருந்து ஊழியர்கள்! தீர்வு காண்பாரா முதலமைச்சர்?

0
126

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகின்ற நிலையில், இதுவரையில் புதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. இதற்காக அதிமுக ஆட்சிக் காலத்தில் 2 முறையும் இந்த ஆட்சி காலத்தில் 3 முறையும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும் அதில் உடன்பாடு ஏறப்படவில்லை என சொல்லப்படுகிறது.

அதிலும் குறிப்பாக பணி மூப்பு அடிப்படையில், ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், ஓய்வு பெறும் நாளில் பலன்களை வழங்க வேண்டும், 80 மாதங்களுக்கு மேல் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் 2003 ஆம் வருடத்திற்கு பிறகு பணியில் இணைந்தவர்களையும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளில் தொழிற்சங்கத்தினர் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில், வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2ம் தேதிக்குள் இவற்றை நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சியின் சி ஐ டி யு தொழிற்சங்கம் நோட்டீஸ் வழங்கியிருக்கிறது. அதேபோல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏஐடி யு சி தொழிற்சங்கம் முதலமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறது. சில தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் அரசு போக்குவரத்து கழகங்களை அரசுத்துறையாக அறிவிக்குமாறு கோரி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், இந்த கோரிக்கைகளில் பெரும்பாலானவை அரசின் கொள்கை முடிவை சார்ந்தது என்பதால் முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும் என்று மற்ற தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வருகிறார்கள்.