Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுகவின் பேனரை கிழித்தெறிந்த பாஜகவினர்! கோவையில் பரபரப்பு!

கோயம்புத்தூர் மாநகரில் பொது இடங்களில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், சார்பாக ஒட்டப்பட்டிருக்கின்ற சுவரொட்டிகளை அகற்றிக்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. சுவரொட்டிகள் அகற்றப்படவில்லையென்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மாநகராட்சி சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி பிறகும் கூட கோவை மாநகரில் அவிநாசி சாலை மேம்பால தூண்களில் திமுகவின் சார்பாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றப்படாமலிருந்தது அதே சமயம் தூண்களில் மற்ற கட்சியினரின் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என சொல்லப்படுகிறது.

ஆகவே திமுகவினர் ஒட்டியிருந்த சுவரொட்டிகளை அகற்ற வேண்டும் என தெரிவித்து பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் அவிநாசி சாலையில் பீளமேடு ,கொடிசியா அருகே அந்த கட்சியை சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

200க்கும் அதிகமான பாஜகவை சார்ந்தவர்கள் அந்தப் பகுதியில் திரண்ட நிலையில், சாலை ஓரத்தில் அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய பாஜகவினர் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்ற பாஜகவினருடன் காவல்துறையினரும், வருவாய்த்துறை அதிகாரிகளும், பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மேம்பாலத்தில் ஓட்டப்பட்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய திமுகவின் சுவரொட்டிகளை பாஜகவை சார்ந்தவர்கள் கிழித்தெறிந்தார்கள்.

இந்த நிலையில், சுவரொட்டிகளை கிழித்த பாஜகவினருக்கும், காவல்துறையினருக்குமிடையே தள்ளுமுள்ளு உண்டானது. இதனைத் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட பாஜகவை சார்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜகவை சார்ந்தவர்கள் காவல்துறையினர் வாகனத்தை இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனையடுத்து வாகனத்தில் ஏற்றப்பட்ட பாஜகவினரை காவல்துறையினர் இறக்கி விட்டனர். இந்த சம்பவம் காரணமாக, கொடிசியா சாலையில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Exit mobile version