கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாடுகளில் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் பரவலை தடுக்க மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவும் அபாயம் உள்ளதால் அதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக இன்று ஒரு நாள் மட்டும் மக்கள் சுய ஊரடங்கு கடைபிடிக்க பாரதப் பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்திருந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக போராட்டங்கள் செய்யப்பட்டு வந்தது.
கொரோனா நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்த சட்ட போராட்டங்கள் கைவிடப்பட்டன. இந்த நோய் பரவலை காரணம் காட்டி மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை ஒடுக்கி வருகிறது என்று இஸ்லாமிய அமைப்புகள் குற்றஞ்சாட்டி வந்தன.
இதனால் மத்திய அரசின் சுய ஊரடங்கு அழைப்பை மீறி சிஏஏ-க்கு எதிராக போராட்டம் டெல்லியில் உள்ள ஷாகின் பாக் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு வேறு எதுவும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீஸ் குவிக்கப்பட்டு டெல்லி மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.