Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா? ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா? ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

முதன்முதலில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பிறகு, உலகின் பல்வேறு நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வந்த நிலையில், தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய போது கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்கினர். எனினும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா தொற்றில் இருந்து அதிக பாதுகாப்பு கிடைக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது:-

கர்ப்ப காலத்தில் கொரோனா வைரசுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள், கடுமையான கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 60 சதவீதம் குறைவாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வலுவான பாதுகாப்பு கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட தாய்மார்களுக்கு பிறந்த ஆறு மாதங்களுக்கு குறைவான குழந்தைகள் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 61 சதவீதம் குறைவாக இருந்ததாகவும், கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 84 சதவீதம் பேர் கர்ப்ப காலத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பிறந்த குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version