கோவையில் பட்டியலின வகுப்பை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்து தகாத வார்த்தைகளால் பேசியதாக ஒருவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதி ஜெ.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவராக சரிதா என்பவர் தற்போது இருந்து வருகிறார். இவர் கடந்த 21ம் தேதி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.
அதில் எங்கள் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் எனது பணியை செய்யவிடாமலும், ஊராட்சி மன்ற தலைவரான எனது பெயரினை பலகைகளில் பொருத்தக் கூடாது எனவும் கூறி, எனது சமூகத்தின் பெயரைக் குறிப்பிட்டு இழிவாக பேசுவதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார் என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர், நீங்கள் நேரடியாக நெகமம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் அந்த புகாரினை நகமும் காவல்நிலையத்தில் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவரை இழிவாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்த பாலசுப்ரமணியத்தை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்த ஊராட்சி மன்றத்தலைவர் சரிதா, “எனது புகாரின் பேரில் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இனிவரும் காலங்களில் மக்கள் பணிகள் செய்வதற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்” என ஜெ.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் சரிதா தெரிவித்துள்ளார்.