முழு ஊரடங்கு ரத்து! இரவு நேர ஊரடங்கு நீடிப்பு!!
தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பெருந்தொற்றின் உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரசுக்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டது. கொரோனாவின் இந்த உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் குறுகிய காலத்தில் பல நாடுகளுக்கும் பரவி வந்த நிலையில் இந்தியாவிலும் இந்த ஒமிக்ரான் வைரசானது நுழைந்தது.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பரவத் தொடங்கிய இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்போது நாடு முழுவதும் பரவி உள்ளது. இந்த ஒமிக்ரான் தொற்றின் வருகைக்கு பிறகு நாட்டில் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது.
அதிலும் டெல்லி, மஹாராஷ்டிரா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் தினசரி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லியில், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததை அடுத்து, தொற்றை கட்டுப்படுத்த அந்த மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
எனினும் கொரோனா பரவல் குறையாததால், இரவு நேர ஊரடங்குடன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து டெல்லியில் தனியார் அலுவலகங்கள், பார்கள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்றவற்றுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த சூழ்நிலையில் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரோனா பரவல் குறைந்து வருவதன் காரணமாக, டெல்லியில் வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் அமல்படுத்தப்பட்டிருந்த முழு ஊரடங்கை ரத்து செய்யும் முடிவுக்கு அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதேபோல் இரவு நேர ஊரடங்கு எந்தவித மாற்றமும் இன்றி அமலில் உள்ளது. இதையடுத்து, 50 சதவீத ஊழியர்களுடன் தனியார் நிறுவனங்கள் செயல்படவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமதி வழங்கி உள்ளார்.