திருப்பதியில் வி.ஐ.பி தரிசனத்தை ரத்து செய்து சாதாரண பக்தர்களின் தரிசனத்திற்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரம்!

0
127

திருப்பதியில் வி.ஐ.பி தரிசனத்தை ரத்து செய்து சாதாரண பக்தர்களின் தரிசனத்திற்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரம்!

கொரோனா மூன்றாவது அலையின் ஊரடங்கிற்கு பிறகு திருப்பதியில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது தேவஸ்தான நிர்வாகம். இதையடுத்து, முதலில் ரூ.300 கட்டண தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதன்படி, நாளொன்றுக்கு 25,000 என்ற எண்ணிக்கையில் முப்பது நாட்களுக்கு ஒருமுறை தேவஸ்தான நிர்வாகம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டு வருகிறது. அந்த டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே ஒரு மாதத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுவிடுவதாக சொல்லப்படுகிறது.

அதனை தொடர்ந்து ஆன்லைனில் இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது திருப்பதியில் நேரடியாக இலவச தரிசனத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இலவச தரிசனத்தில் முதலில் 10 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது, இலவச தரிசனத்தில் சென்று தரிசித்து வர 30 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் கூடுதலாக 10 ஆயிரம் பேர் என மொத்தமாக 40 ஆயிரம் பக்தர்கள் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பதியில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த நாட்களில் வி.ஐ.பி தரிசனத்தை ரத்து செய்து சாதாரணப் பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வழிபட கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.