தமிழகத்தில் ரத்தான இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் ரத்தானது! முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

0
133

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டது. இவை தவிர பல கட்டுப்பாடுகளும் தற்சமயம் அமலில் இருந்து வருகிறது.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நோய்த்தொற்று உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கும் அவசியம் ஏற்பட்டால் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

இந்த நிலையில், தமிழக பகுதிகளில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்றைய தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் அரசு முன்னெடுத்த மிகச்சிறந்த நடவடிக்கையின் காரணமாக, நோய்த் தொற்று பரவல் குறைந்திருப்பதாகவும், போதுமான மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் இருந்தாலும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிற நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக சுகாதாரத் துறையால் கூறப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர்.

அதோடு மாநிலத்தின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மாணவ, மாணவியரின், எதிர்காலம் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை உள்ளிட்டவை மீள்வதற்கு ஏதுவாக வழிகாட்டு நெறிமுறைகளை முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது, தற்சமயம் நோய்த்தொற்று பரவல் குறைந்திருந்தாலும் பொதுமக்கள் நலன் கருதி நோய் பரவலை கட்டுக்குள் வைக்க கீழ்கண்ட கட்டுப்பாடுகள் மற்றும் வருகின்ற 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதாவது சமுதாயம் மற்றும் கலாச்சாரம், அரசியல் கூட்டங்கள், உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடர்ந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கின்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல பொருட்காட்சிகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது மழலையர் விளையாட்டு பள்ளிகள் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்படுவதற்கு அனுமதி கிடையாது.

அரசு மற்றும் தனியார் நடத்தும் அனைத்து கலை விழாக்களும் தடை செய்யப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சமாக 100 பேர்களுடன் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது, இறப்பு சார்ந்த நிகழ்வுகள் உள்ளிட்டவற்றில் 50 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட மற்ற கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்படுகின்றன, அதன் விவரங்கள் என்னவென்றால் நிலையான வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி வருகின்ற 1ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தற்சமயம் நோய்த்தொற்று பாதுகாப்பு மையங்கள் ஆக செயல்படும் கல்லூரிகள் உள்ளிட்டவற்றை தவிர்த்து மற்ற அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 1ஆம் தேதி முதல் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்று முதல் இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணி வரையில் இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது, அதேபோல எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.