வெள்ளத்தில் மிதக்கும் தலைநகரம்!! பெருக்கெடுத்து ஓடும் யமுனை ஆற்றில் மக்கள் அவதி!!
கொட்டி வரும் கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தலைநகர் டெல்லியை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
வடமாநிலங்களில் பருவ மழையின் காரணமாக தற்போது அங்கு கனமழை தொடர்ச்சியாக கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வட மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்கள் வெள்ளகாடாக காட்சியளிக்கின்றன.
இந்த சூழ்நிலையில் தலைநகர் டெல்லியில் 40 ஆண்டுகளுக்கு இல்லாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அங்கு மேலும் மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கனமழையின் காரணமாக யமுனை ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு நீர்மட்டமானது இயல்பை விட அதிக அளவு தாண்டியுள்ளதால் தலைநகர் டெல்லியை சுற்றி எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
கடந்த வியாழன் அன்று 208.66 மீட்டர் அளவு இருந்த யமுனை ஆற்றின் நீர்மட்டமானது தற்போது சற்று குறைந்து 207.62 மீட்டர் அளவு உள்ளது. ஆற்றின் நீர் சற்று குறைந்த பொழுதிலும் இன்னும் அபாய கட்டத்திலேயே உள்ளது.
நகரை முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது அவர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நகரின் முக்கிய சாலைகள் முழுவதும் வெள்ள நீரில் மூழ்கி உள்ளதால் மக்கள் தங்கள் அன்றாட பணிகளை செய்வதற்கு மிகவும் சிரமப் படுகின்றனர். மேலும் வெள்ளத்தினால் ஏற்படும் நிலைமையை சரி செய்யும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.