கேப்டனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்! வருத்தம் தெரிவித்த மருத்துவர்கள்!
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகேயுள்ள காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் சென்ற போது எதிர்பாராவிதமாக விபத்துக்குள்ளானது. அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். ஆனால் அந்த ஹெலிகாப்டரை இயக்கிய நபர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் மட்டுமே அங்கிருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.
80% உடல் எரிந்த நிலையில் காப்பாற்றப்பட்ட அவர், தற்போது கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். ஆனால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் மருத்துவ துறை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன் காரணமாக அவரை பெங்களூர் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்படும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார். கேப்டன் வருண் சிங் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் சௌர்யா சக்கரம் என்ற விருதை வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2020ஆம் ஆண்டு வானில் அவசர சூழலில் தன்னுடைய தேஜஸ் போர் விமானத்தை காப்பாற்றியதற்காக இவருக்கு விருது வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து விமான படை அதிகாரிகள் தனி விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத் தக்கது.