Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நள்ளிரவில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; அப்பளம் போல் நொறுங்கிய கார்! தப்பி ஓடிய ஓட்டுனர்

நள்ளிரவில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; அப்பளம் போல் நொறுங்கிய கார்! தப்பி ஓடிய ஓட்டுனர்

நாமக்கல் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி வந்த லாரியுடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதிய சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

நேற்று நள்ளிரவு நாமக்கல்லில் செங்கல் லோடு ஏற்றிக் கொண்டு திருச்சியை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. திருச்சி சாலையில் சின்னவேப்பநத்தம் அருகே சென்றபோது, திருச்சியில் இருந்து நாமக்கல் பகுதிக்கு நள்ளிரவில் டாடா சுமோ கார் ஒன்று லாரியுடன் பயங்கர சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணித்த ஓட்டுனர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

விபத்து பற்றி அறிந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் பலியாகி வாகனத்தில் சிக்கியிருந்த 6 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து நிரூபர்களிடம் போலீசார் கூறியதாவது; காரில் பயணம் செய்த இரண்டு பேர் நாமக்கல் அருகில் இருக்கும் வேட்டாம்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், மற்ற நால்வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் என்றும் கூறப்பட்டது. இவர்கள் திருச்சியில் உள்ள காட்டுப்புத்தூரில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த விபத்தில் சம்பந்தமான லாரி ஓட்டுனர் தப்பி ஓடியுள்ளார். விபத்து அதிவேகத்தினால் நடந்ததா அல்லது மதுபோதையில் வாகனம் இயக்கப்பட்டதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version