தர்பார் படத்தின் அந்த வசனத்தை நீக்கவேண்டும்… நீதிமன்றத்தில் முன்னாள் போலிஸ் புகார் !
தர்பார் படத்தில் சீருடை பணியாளர்கள் மனதைப் புண்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் காவலர் ஒருவர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் மற்றும் சுனில் ஷெட்டி நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவான தர்பார் திரைப்படம் நேற்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியானது. முதல் காட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல வசூல் செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் மற்றும் சில காட்சிகள் கேலிக்கும் கண்டனத்துக்கும் ஆளாகியுள்ளன. குறிப்பாக ரஜினி உடற்பயிற்சி செய்வது போன்ற காட்சிகளின் கிராபிக்ஸை பலர் கேலி செய்து வருகின்றனர். மேலும் ரஜினி என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்துள்ள கதாபாத்திரத்தை அவரது ரசிகர்கள் புகழ்ந்து பேசினாலும் சமூக ஆர்வலர்கள் அதன் மீது விமர்சனம் வைத்துள்ளனர். படத்தில் மனித உரிமைகள் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரை ரஜினி துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கையெழுத்து பெறுவது போன்ற காட்சியும் எதிர்ப்புகளை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் உள்ள சில காட்சிகள் போலிஸ், ராணுவம் உள்ளிட்ட சீருடை பணியாளர்களை இழிவுப் படுத்துவதாகவும் முன்னாள் சி.ஐ.எஸ்.எப் வீரர் மரியமைக்கேல் என்பவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். அவரது மனுவில் இத்துடன் படத்தில் ரஜினி பேசும் ‘நான் போலிஸ் இல்லை ரௌடி’ என்ற வசனத்தை நீக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.