வலிமை படத்திற்கு தடை கோரிய வழக்கு! உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவு!!

0
119

வலிமை படத்திற்கு தடை கோரிய வழக்கு! உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவு!!

அஜித் நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் வலிமை. இந்த படத்தில் கதாநாயகியாக ஹிந்தி நடிகை ஹுமா குரேஷி, வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் நடித்திருந்தனர். போனி கபூர் தயாரிப்பில் வெளியான இப்படத்தை எச்.வினோத் இயக்கி இருந்தார்.

கிட்டத்தட்ட ரசிகர்களின் இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பிறகு, பெரும் எதிர்பார்ப்போடு கடந்த பிப்ரவரி 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பால் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

இதனிடையே அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், 2016ல்  வெளியான தனது ‘மெட்ரோ’ படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெ. ஜெயகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், பிற மொழிகளில் மெட்ரோ படத்தை தயாரிக்க உள்ள நிலையில், அதே அம்சங்களுடன் வலிமை படமாக்கப்பட்டது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது. எனவே வலிமை படத்தை சாட்டிலைட் சேனல், ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதித்து ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அதற்கு எச்.வினோத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், செய்தித்தாள்களில் அன்றாடம் வரும் சங்கிலி பறிப்பு, போதைப்பொருள் கடத்தல், கொலை போன்ற  செய்திகளின் அடிப்படையில் உருவான வலிமை படத்தின் கதை, கதாப்பாத்திரங்கள் அனைத்தும் வெவ்வேறானவை. மெட்ரோ படத்தின் கதை, கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டதாக கூறுவது தவறு. எனவே எந்த காப்புரிமையையும் மீறவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

பதில் மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம் வலிமை படத்தின் ஓ.டி.டி. வெளியீட்டிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்கின் விசாரணையை ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.