ஓசி பஸ் விவகாரம்! மூதாட்டி மீது வழக்கு பதியவில்லை – வெறும் வதந்தி என கோவை காவல்துறை கண்காணிப்பாளர் பேட்டி
ஓசி டிக்கெட் வேண்டாம் நான் காசு கொடுத்தே போகிறேன் என பேருந்து நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த மூதாட்டி குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் இதற்காக அந்த மூதாட்டி மீது வழக்கு பதியபட்டதாக இன்று செய்திகள் வெளியாகின.ஆனால் அது உண்மையல்ல வெறும் வதந்தி என கோவை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு கோவை அரசு பேருந்தில் துளசி அம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் ஏறினார். அவர் அமைச்சர் பொன்முடி ஓசி பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என்று கூறியதை கேட்டு, நான் ஒன்றும் ஓசி பஸ்ஸில் செல்ல மாட்டேன் இந்தா பயணச்சீட்டுக்கான பணம் என்று நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவ்வாறு அவர் நடத்துனரிடம் நடந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
திமுக செய்தி தொடர் இணைச் செயலாளர் இந்த வீடியோவை பார்த்துவிட்டு ,இது முழுக்க முழுக்க நாடகம். திமுகவை கேலி செய்யவும் மக்கள் மத்தியில் அவமதிப்பை ஏற்படுத்தவும் இவ்வாறு செய்துள்ளனர் என்று கூறினார். இதை செய்தது அதிமுக ஐடி விங்கை சேர்ந்த பிரித்திவிராஜ் என்று அவர் கூறியிருந்தார்.இதையடுத்து கோவை அதிமுக ஐடி விங்கை சேர்ந்த பிரித்விராஜ் தான் இதை திட்டமிட்டு செய்துள்ளார் என அவர் ஒப்புக் கொண்டார்.
இவர் தனது பக்கத்து வீட்டு மூதாட்டி துளசி அம்மாள் என்பவரிடம் இவ்வாறு நீங்கள் பேருந்தில் ஏறியவுடன் பேச வேண்டும் எனக் கூறியுள்ளார்.இந்நிலையில் அதிமுகவினர் பேச்சைக் கேட்டு மூதாட்டியும் அதேபோல் நடந்து கொண்டுள்ளார்.
மேலும் இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அதிமுகவை சேர்ந்த பிரித்விராஜ் எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது பேசியதை குறிப்பிட்டு திமுகவுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
இவ்வாறு திமுக வை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுத்ததாலும், நடத்துனரிடம் மூதாட்டி தகராறு செய்ததாலும் மூதாட்டி உட்பட அதிமுகவை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் இது உண்மையல்ல வெறும் வதந்தி தான் என கோவை காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ள்ளார். இது குறித்து பேசிய அவர் அந்த மூதாட்டி மீது வழக்கு எதுவும் பதியவில்லை ஆனால் காலையிலிருந்து வழக்கு பதிந்துள்ளதாக போலி செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து முறையாக விசாரிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.