பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு! கைது செய்யப்படுவாரா இம்ரான்கான்?

0
154

சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக, அந்த நாட்டின் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராகவும், பிரதமருக்கு எதிராகவும், தீவிர போராட்டத்தில் இறங்கினார்கள்.

மேலும் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களே அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அந்த நாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், அந்த நாட்டில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. தொடர்ந்து ஷபாஸ் ஷெரிப் புதிய பிரதமராக பதவியேற்றார்.

அவர் பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பாகிஸ்தானின் பிரதமர் சமீபத்தில் சவுதி அரேபியா சென்றிருந்தபோது, அங்கு இம்ரான்கான் ஆதரவாளர்கள் ஷபாஸ் ஷெரிப்பை கண்டித்து போராட்டத்தில் குதித்தார்கள்.

அந்த சமயத்தில் அவர்கள் பாகிஸ்தான் பிரதமரை திருடன், துரோகி என்று தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர் இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை உண்டாக்கியது.

இந்த சூழ்நிலையில், இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண காவல்துறையினர் இம்ரான்கான் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் உட்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தில் இம்ரான்கானுக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் அவர் கைது செய்யப்படுவார் என்று பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்திருக்கிறார்.