பள்ளிப் பாட புத்தகங்களில் சாதிப் பெயர்கள் நீக்கம் – தமிழக அரசு அதிரடி
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பாக வழங்கப்படும் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருக்கும் தமிழறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள் உள்ளிட்ட தமிழ்த்தலைவர்களின் பெயருக்கு பின்னால் இருக்கும் அவர்களின் சாதிப்பெயர்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் நீக்கியிருக்கிறது.
திமுக என்றாலே சாதி ஒழிப்பை முன்னெடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.அந்த வகையில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசில் இதற்கு சாதகமாக பல்வேறு நபர்களை பல முக்கிய பொறுப்புகளில் தமிழக அரசு நியமித்துள்ளது.
அந்த வகையில் தமிழக அரசின் பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவராக பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து அவரின் கடந்தகால செயல்பாடுகள் இந்த பொறுப்புக்கு தகுதியானது இல்லை என எதிர்ப்பு கிளம்பியது.இந்நிலையில் அவரது நியமனத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அவர்களின் எதிர்ப்புகளையும் மீறி திமுக அரசு அவரை பாடநூல் தலைவராக நியமித்தது. இந்த நிலையில் தான் தமிழ்நாடு பாடநூல் கழகம் வழங்கும் 12 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் தமிழறிஞர்களின் பெயரில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பன்னிரன்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருக்கும் “பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள்” என்ற பாடப்பகுதியில் உள்ள தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் என்றிருந்த பெயர் தற்போது உ.வே.சாமிநாதர் என மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பதை மீனாட்சி சுந்தரனார் எனவும், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்பதை ராமலிங்கம் எனவும் மாற்றி அச்சிடப்பட்டுள்ளது.
மேலும் இதுமட்டுமல்லாமல், தமிழின் முதல் நாவலாசிரியரான மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்ற பெயரை வேதநாயகம் எனவும், இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரான சி.வை.தாமோதரம் பிள்ளை என்ற பெயரை சி.வை.தாமோதரம் என்றும் பின்னால் இருக்கும் அனைத்து சாதிப்பெயர்களையும் நீக்கி தமிழ்நாடு பாடநூல் கழகம் புதிய திருத்தம் மேற்கொண்டுள்ளது.
ஏற்கனவே தமிழக அரசு பிறப்பித்த தமிழ்நாட்டின் சாலைகள், தெருக்கள் மற்றும் அலுவலக கட்டடங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்படும்போது அவர்கள் பெயரின் பின்னால் இருக்கும் சாதிப்பெயர் இடம்பெறக்கூடாது அரசாணையின் படியே இந்த சீர்திருத்தமும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து விரைவில் அனைத்து வகுப்பு பாடப்புத்தகங்களிலும் சாதிகளை நீக்கி பெயர் திருத்தம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.