கழிவு நீரை திறந்து விட்டு தமிழ்நாட்டு காவிரியை திட்டமிட்டு அசுத்தப்படுத்தும் கர்நாடக அரசின் செயலை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

0
154

கழிவு நீரை திறந்து விட்டு தமிழ்நாட்டு காவிரியை திட்டமிட்டு அசுத்தப்படுத்தும் கர்நாடக அரசின் செயலை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

தமிழகத்தில் பாயும் காவிரியை அசுத்த படுத்தும் வகையில் திட்டமிட்டே கழிவு நீரை திறந்து விடும் கர்நாடக அரசின் செயலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் “நிறம் மாறி நாறும் மேட்டூர் அணை நீர்:
தூய்மைப்படுத்த நடவடிக்கைத் தேவை!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் முதலில் பச்சை நிறமாகவும், பின்னர் நீல நிறமாகவும் மாறி கடுமையாக நாற்றமடிக்கத் தொடங்கியுள்ளது. காவிரியில் கர்நாடகம் கழிவுநீரை திறந்து விட்டு அசுத்தப்படுத்துவது தான் இதற்கு காரணம் ஆகும். தமிழ்நாட்டு காவிரியை திட்டமிட்டு அசுத்தப்படுத்தும் கர்நாடக அரசின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணையில் 153.46 சதுர கி.மீ பரப்பளவில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. மேட்டூர் அணை இன்றைய நிலையில் முழுமையாக நிரம்பியுள்ளது. கடந்த 10 வாரங்களுக்கு மேலாகவே அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் கூடுதலாக இருந்து வரும் நிலையில், செப்டம்பர் மாத இறுதியில் பண்ணைவாடி, கோட்டையூர், காவேரிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நீர்ப்பரப்பு மீது பச்சை நிறத்தில் வேதிப்படலம் ஏற்படத் தொடங்கியது. பின்னர் படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் இந்தப் படலம் பரவியது. பச்சை நிற வேதிப்படலம் பரவிய இடங்களில் தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசத் தொடங்கியது. ஆனால், அது சரி செய்யப்படவில்லை.

மேட்டூர் அணை நீர் மீது படர்ந்த வேதிப்படலம் அகற்றப்படாத நிலையில், தொடர் வேதிவினைகளின் விளைவாக கடந்த சில நாட்களாக அது நீல நிறமாக மாறியிருக்கிறது. அதுமட்டுமின்றி துர்நாற்றத்தின் தீவிரமும் அதிகரித்திருக்கிறது. மேட்டூர் அணையின் கரையோரப் பகுதிகளில் அமைந்துள்ள ஊர்களில் வாழும் மக்கள், தங்களின் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அடைந்து கிடக்கின்றனர். மேட்டூர் அணையின் கரைப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களின் வகுப்பறைகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் ஊதுபத்தி கொளுத்தி, நாற்றத்தை சமாளித்தனர். வீடுகளிலும் பொதுமக்கள் செயற்கை நறுமணத்தின் உதவியுடனேயே பொழுதுகளை கழித்து வருகின்றனர். இன்னும் பலர் துர்நாற்றத்தை தாங்க முடியாமல் தங்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

கர்நாடகத்திலிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் கழிவுகள் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதில் உண்மை இல்லாமல் இல்லை. பெங்களூரு நகரிலும், அதையொட்டிய பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து ஒவ்வொரு நாளும் 150 கோடி லிட்டர் கழிவுகள் காவிரியில் கலக்கவிடப்படுகின்றன. இதை கர்நாடக அரசே வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை நீரில் படிந்துள்ள பசுமைப்படிமம் மற்றும் நீரை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எடுத்துச் சென்று ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். ஆனாலும், அதன் தொடர்ச்சியாக மேட்டூர் அணை நீரை தூய்மைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது வேதனையளிக்கிறது.

மற்றொருபுறம் மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளில், போதிய அளவில் தண்ணீர் இல்லாத போது, பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டதால், அதற்காக பயன்படுத்தப்பட்ட யூரியாவின் கழிவுகள் காவிரி நீரில் கலந்ததாகவும், அதனால் தண்ணீரில் கலந்திருந்த பாசிகள் வளர்ந்ததால் தான் பசுமைப் படிமம் ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது உண்மையா….. திசை திருப்பும் செயலா? என்பது தெரியவில்லை. மேட்டூர் அணையிலிருந்து நாற்றம் வீசத் தொடங்கி பல வாரங்களாகியும் அது சரி செய்யப்படாததை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

மேட்டூர் அணையில் தேக்கப்பட்டிருக்கும் நீரில் இத்தகைய பசுமைப் படிமம் ஏற்படுவதோ, அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதோ புதிதான ஒன்றல்ல. கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும் இதேபோன்று பசுமைப் படிமம் ஏற்பட்டு பல வாரங்களாகியும் அது சரி செய்யப்படாததால், நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து பல கிலோ மீட்டர் தொலைவுக்கு மீன்கள் செத்து மிதந்தன. அதற்கு முன்பும் இதேபோன்ற நிலை ஏற்பட்ட போது, மேட்டூர் அணையை தூய்மைப்படுத்த வேண்டும்; காவிரி ஆற்றில் கர்நாடகம் கழிவுகளை திறந்து விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. அதன்பிறகும் அடிக்கடி மேட்டூர் அணை தண்ணீர் பசுமையாக மாறுவதும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதும் தடுக்கப்படாதது நல்வாய்ப்புக் கேடானதாகும்.

மேட்டூர் அணை தண்ணீர் உடனடியாக தூய்மைப்படுத்தப்படாவிட்டால் அணை நீரில் உள்ள மீன்கள் மீண்டும் செத்து மிதக்கும் ஆபத்து உள்ளது. அதுமட்டுமின்றி, நோய்கள் பரவும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே, மேட்டூர் அணை தண்ணீரை தூய்மைப்படுத்தவும், துர்நாற்றத்தைப் போக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, காவிரி நீர் தமிழக எல்லைக்குள் நுழையும் பிலிகுண்டுலு பகுதியில் தண்ணீர் மாதிரியை எடுத்து ஆய்வு செய்து, அதில் எந்த அளவுக்கு கழிவுகள் கலந்துள்ளன என்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும். இதே ஆய்வை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு முறைப்படி கேட்டுக்கொள்ள வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக காவிரியை கர்நாடகம் சாக்கடையாக பயன்படுத்தி கழிவு நீரை வெளியேற்றுவதை நிரந்தரமாகத் தடுக்கவும், இதுவரை காவிரியை அசுத்தப்படுத்தியதற்காக கர்நாடக அரசிடமிருந்து உரிய இழப்பீட்டை பெறவும் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.