வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு: மத்திய அரசு!!

0
95

அரசு அலுவலகங்களில் வேலை செய்யாது மற்றும் ஊழலில் ஈடுபடும் ஊழியா்களுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிப்பதற்காக, அவா்களைக் கண்டறியுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் வேலை செய்யாது மற்றும் ஊழலில் ஈடுபடும் ஊழியா்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. திறமையற்ற பணியாளர்கள் மற்றும் ஊழலில் ஈடுபடும் பணியாளர்களை கண்டறியுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய பணியாளா் நல அமைச்சகத்தின் அடிப்படை விதிகள்-56(J)(I) மற்றும் 1972-ம் ஆண்டின் மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதிய) விதிகளின் கீழ் ஒரு மத்திய அரசு, ஊழியரின் செயல்திறனை ஆய்வு செய்வதற்கும் தேவைப்பட்டால் பொதுநலன் கருதி அவரை முன்கூட்டியே ஓய்வு பெற செய்வதற்கும் முழு அதிகாரம் உள்ளது.

இதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

ஒரு ஊழியர் 50 – 55 வயதை நிறைவு செய்திருந்தாலோ அல்லது 30 ஆண்டு பணிக்காலத்தை நிறைவு செய்திருந்தாலோ அவரது பணி பதிவேட்டை ஆய்வு செய்து, அவர் செயல் திறமையற்றவராகவோ அல்லது ஊழலில் ஈடுபட்டவராகவோ இருந்தால், அவரின் மீது இந்த நடவடிக்கையை எடுக்கலாம்.

ஊழியரின் செயல்திறன் திடீரென குறைந்துவிட்டால், அவரின் பணி பதிவேட்டை ஆய்வு செய்து ஓய்வு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து துறைகளும் தங்கள் துறையின் கீழ் பணியாற்றுவோரின் பணி பதிவேட்டை பராமரிக்க வேண்டும். இதனை ஒவ்வொரு காலாண்டிலும் ஆய்வு செய்து, திறம்பட பணியாற்றாத அல்லது ஊழலில் ஈடுபடும் பணியாளர்களை கண்டறிந்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்கூட்டியே ஓய்வு அளிக்கப்படும் ஊழியர்களுக்கு 3 மாதம் நோட்டீஸ் அல்லது 3 மாதம் ஊதியம் அளிக்க வேண்டும் என்றும் ஓய்வூதியம் அவர்களுக்கு உண்டு என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசு ஊழியர்கள் அவர்களின் பணிகளை முறையாக செய்வார்கள் என்றும், ஊழலில் ஈடுபடமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.