ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்த ஓபிஎஸ்! மகிழ்ச்சியில் ரவீந்திரநாத்!

0
119

சென்ற 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி அடைந்தார் ஓபிஎஸ் அவர்களின் மகன் ரவீந்திரநாத் குமார், இவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எல்லோராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. இருந்தாலும் அவருக்கு மத்திய அமைச்சரவையில் எந்தவித இலாக்காவும் ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் கூட இவருக்கு இடம் கிடைக்கவில்லை.

ஆனால் அண்மையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து உரையாற்றிய இருக்கிறார்கள்.அந்த சமயத்தில், ஓபிஎஸ் மத்திய அமைச்சரவையில் தன்னுடைய மகனுக்கு இடம் கிடைக்கவில்லை என்று தன்னுடைய வருத்தத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்ததாக தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், சென்னையை தலைமையிடமாக கொண்டு மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் நிதி பரிபாலன குழுவின் உறுப்பினராக ரவீந்திரநாத் குமாரை மத்திய அரசு நியமனம் செய்து உத்தரவிட்டது. மூன்றாண்டு கால பதவிக்கு ரவீந்திரநாத் மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அதிமுகவில் நிலவிவந்த உட்கட்சி பிரச்சனைகளை மத்திய அரசிடம் எடுத்துக் கூறி அதற்கு தீர்வு காண்பதற்காக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்ற அதிமுகவின் தலைமை தற்போது அதையும் பேசி முடித்துவிட்டு ஓபிஎஸ் தன்னுடைய மகனுக்கு மத்திய அரசு பதவியையும் கேட்டுப் பெற்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதுதான் ஒரு கல்லில் இரு மாங்காய் என்பதோ என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள்.