Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!!

தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!!

தென் தமிழகம் மற்றும் அதனை ஓட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மேலும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் (மார்ச் 13-ந் தேதி) சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மறுதினம் தென் தமிழக மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஞாயிற்றுக்கிழமையன்று தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை.

Exit mobile version