இந்த மாவட்டங்களிலெல்லாம் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

0
144

இந்த மாவட்டங்களிலெல்லாம் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக,

நாளை மறுநாள் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வியாழக்கிழமையை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வருகிற வெள்ளிக்கிழமை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.