தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக கடந்த சில வாரங்களாகவே அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய இருக்கும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் அக். 12ம் தேதி வடக்கு ஆந்திர கடற்கரை பகுதியில் கரையை கடக்க கூடும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இதனால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அந்தமான் கடல்பகுதி மற்றும் வடக்கு ஆந்திரா கடல் பகுதிக்கு வரும் 12ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.