இன்னும் சில மணி  நேரங்களில்  விண்ணில் பாயும் சந்திரயான்-3!! சாதனை மைல்கல்லை எட்ட இருக்கும் இந்தியா !! 

0
109
Chandrayaan-3 flying in the sky today!! India is about to reach a record milestone!!

இன்னும் சில மணி  நேரங்களில்  விண்ணில் பாயும் சந்திரயான்-3!! சாதனை மைல்கல்லை எட்ட இருக்கும் இந்தியா !! 

இந்தியாவின் முக்கிய லட்சிய கனவாக இருக்கும் சந்திராயன்-3 இன்று இரண்டு மணி அளவில் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

இந்தியாவில் இன்று வரலாற்று நிகழ்வாக சந்திராயன்- 3 விண்கலத்தை சுமந்து கொண்டு எல்விஎம்-3 ராக்கெட் இன்று விண்ணில் சீறிப்பாய இருக்கிறது. சோதனை ஓட்டங்கள் முழுவதும் நடைபெற்ற நிலையில் எரிபொருள் நிரப்பப்பட்டு நேற்று மதியம் ராக்கெட் புறப்படுவதற்கான 251/2 மணி நேர கவுண்டவுன் தொடங்கியது.

ஆந்திர மாநிலத்தின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து மதியம் 2:35  மணி அளவில் விண்ணில் பறக்கிறது. இறுதி கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே நிலவை ஆய்வு செய்ய அமெரிக்கா ரஷ்யா மற்றும் சீன நாடுகள் விண்கலத்தை அனுப்பி உள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் மூன்றாவது முறையாக நிலவை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்பும் முயற்சியை முன்னெடுத்த நிலையில் உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது.

இந்த நிலையில் சந்திரயான் திட்டம் செயல்படுவதை நேரில் காண்பதற்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்  இன்று ஸ்ரீ ஹரி பாட்டா செல்லவிருக்கிறார். அதேபோல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ராக்கெட் ஏவுதலை பார்ப்பதற்காக இஸ்ரோநிலையத்தில் பதிவு செய்து காத்துக் கொண்டுள்ளனர்.

சந்திராயன் 3 திட்டமானது ரூ 615 கோடி செலவில் அமைக்கப்பட்டது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக  3895 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்ட விண்கலத்துடன் உந்துகலன் ( ப்ரபல்சன்) , லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய கலன்கள் உள்ளன.

சந்திராயன் 2 விண்கலத்துடன் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் ஏற்கனவே நிலவை சுற்றி வருகிறது. அதன் ஆயுட்காலம் ஏழு ஆண்டுகள் என்பதால் தற்போது சந்திராயன்-3 விண்கலத்துடன் ஆர்பிட்டர் அனுப்பப்படவில்லை. அதேபோல் தற்போது அனுப்பப்படும் லாண்டர் மற்றும் ரோவர் கலன்கள் புவி வட்டப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு எடுத்துச் செல்லப்படும்.

அதன்பின்னர் லேண்டெர் தனியாக பிரிந்து நிலவில் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தரை இறங்கும். அதைத்தொடர்ந்து 14 நாட்கள் நிலவின் தன்மையையும், சூழலையும் லேண்டர் மற்றும் ரோவர் கலன்கள் ஆய்வு செய்ய உள்ளன. விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள 7 வகையான கருவிகள் தனித்தனியாக பிரிந்து ஆய்வு செய்ய உள்ளன.

இந்தத் திட்டம் மட்டும் வெற்றி அடைந்தால் அமெரிக்கா,  ரஷ்யா,  சீனா , அடுத்தபடியாக நிலவில் தடம் பதித்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுவிடும். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 2  விண்கலம் திட்டமிட்டபடி தொழில்நுட்ப கோளாறால் தரை இறங்காமல் அதில் உள்ள லேண்டெர் கலன் நிலவின் தரையில் மோதி செயலிழந்தது. அதில் பெற்ற படிப்பினையை அடிப்படையாகக் கொண்டு சந்திராயன் -3 விண்கலத்தை விஞ்ஞானிகள் மேம்படுத்தி உள்ளனர்.