நிர்வாக காரணங்களுக்காக ஊராட்சி செயலாளர்களுக்கு வட்டார, ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் இடமாற்றம் செய்யப்பட இருப்பதாக தமிழக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இது குறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் பொன்னையா அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களை நிர்வாக காரணங்களுக்காக வட்டார அளவில் மாறுதல் செய்யும் அதிகாரத்தினை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கும்,ஊராட்சி ஒன்றியங்களுக்கிடையேயான பணியிட மாறுதல் செய்யும் அதிகாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளருக்கும், மாவட்ட மாறுதல் செய்யும் அதிகாரத்தினை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் அவர்களுக்கும் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
மேலும், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கோரிக்கை மனுவினை பரிசீலனை செய்ததில், பின்வரும் காரணங்களுக்காக கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு, வட்டார அளவில் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்படுதலுக்கான காரணங்கள் :-
✓ வயது மற்றும் உடல்நலம் சார்ந்த அடிப்படையில் கிராம ஊராட்சிகளை ஒதுக்கீடு செய்தல்
✓ ஊராட்சி செயலாளர் முதுநிலை மற்றும் நிர்வாக அனுபவத்திற்கு ஏற்ப கிராம ஊராட்சிகளில் பணியமர்த்துதல்
✓ கிராம ஊராட்சியில் உள்ள பணிகளுக்கு ஏற்ப தகுதியான ஊராட்சி செயலாளர்களை பணியமர்த்துதல்
✓ ஊராட்சி செயலாளர்கள் ஒரே கிராம ஊராட்சியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதை மாற்றியமைத்தல்
✓ கள அளவில் மாறுபட்டுள்ள வெவ்வேறு ஊராட்சிகளில் பணியாற்றும் வாய்ப்பு பெறுவதால் ஊராட்சி செயலாளர்களின் திறன் மேம்பாடு பெறுதல்
✓ நிர்வாக நலன் மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் ஊராட்சி செயலாளர்களுக்கு பணியிட மாறுதல் போன்ற காரணங்களையும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டு இருக்கின்றனர்.