சென்னை சென்ட்ரல் -கே.எஸ்.ஆர். பெங்களூரு இடையேயான சிறப்பு ரயில் நாலை முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
சென்னை சென்ட்ரல் -கே.எஸ்.ஆர். பெங்களூரு இடையே இரட்டை அடுக்கு ஏசி சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த சிறப்பு ரயிலின் முதல் சேவை நாளை முதல் தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து தினசரி காலை 7.25 மணிக்கு புறப்படும் இரட்டை அடுக்கு சிறப்பு ரயில் (06075), அதேநாள் மதியம் 1.10 மணிக்கு கே.எஸ்.ஆர். பெங்களூரு சென்றடையும்.
அதேபோல் கே.எஸ்.ஆர். பெங்களூருவில் இருந்து தினசரி மதியம் 2.30 மணிக்கு புறப்படும் இரட்டை அடுக்கு சிறப்பு ரயில் (06076), அதேநாள் இரவு 8:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். மேலும், இந்த சிறப்பு ரயில் அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, பங்காரப்பேட், கிருஷ்ணராஜபுரம் மற்றும் பெங்களூரு கண்டோன்மெண்ட் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது.