அதிரடி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்! கொண்டாடத்தில் தூத்துக்குடி மக்கள் !

0
108

தூத்துக்குடியில் 1994 ஆம் ஆண்டு  ஸ்டெர்லைட்  ஆலையை அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது ஆலையை திறந்த பின்,சுற்றுச்சூழல் மாசடைவதாகவும், சுற்றுவட்டாரத்தில் வாழுபவர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான நோய்கள் ஏற்படுவதாகவும்,கூறி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆலையை மூடக்கோரி பல்வேறு காலக்கட்டங்களில் போராட்டமும், நீதிமன்றங்களில் வழக்கும் தொடர்ந்து வந்தனர். இதனைத்தொடர்ந்து 2018,மே 22 ஆம் தேதி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணி போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.இதனையடுத்து மே 28 ஆம் தேதி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக கூறி தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியமும்,தமிழக அரசும் ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது.

தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம்
ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு ஒன்றை அமைத்து ஆய்வை மேற்கொண்டது. இந்த குழு தாக்கல் செய்த அறிக்கையின் படி ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை,எனவே ஆலையை திறக்கலாம் என பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்தது.

இதனைத்தொடர்ந்து தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆலையை திறக்க இடைக்காலத்தடை விதித்ததுடன் பசுமைத் தீர்பாயத்திற்கு இந்த வழக்கை விசாரிக்க அனுமதி இல்லை எனவே வேதாந்தா நிறுவனம் சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு தீர்ப்பளித்தது.

இதன் பின்,வேதாந்த நிறுவனம் உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய படி
கடந்த வருடம் பிப்ரவரி 27 ஆம் தேதி ஆலையை திறக்க அனுமதி வழங்குமாறு
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது இதனையடுத்து ஜூன் மாதமே இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வு ஒன்றை அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.இந்த சிறப்பு அமர்வு ஜீன் 27 ஆம் தேதி முதல் விசாரணையை தொடங்கியது.இதன் பின் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி
அன்று இந்த வழக்கின் தீர்ப்பு தேதிகுறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில் அசம்பாவிதங்கள் எதுவும்  நடைபெறாமல் இருக்க தூத்துக்குடியில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு,ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி கிடையாது என்றும் தீர்ப்பளித்தது.மேலும்,தமிழக அரசு உத்தரவை எதிர்த்து வேதாந்தா தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்வதாகவும் தீர்ப்பளித்தது.இந்த அதிரடி தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்து,இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

அதே நேரம் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.