வெள்ள அபாய எச்சரிக்கை! மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் ஏரி!

0
154

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்ட உள்ளது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 22 அடியாக அதிகரித்துள்ளது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்று முழு கொள்ளளவை எட்டும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு வினாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்திற்கு ஏற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், செம்பரம்பாக்கம் ஏரி நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராம மக்களுக்கு பொதுப்பணித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.