சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் இருந்து ஏசி தலையில் விழுந்து ஊழியர் பலி!!
மூன்றாவது மாடியில் புது அறை புணரமைப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஊழியர்களின் கவனக்குறைவால் ஏசி கழண்டு விழுந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(62). இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னிசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் இன்று மதியம் 2 மணிக்கு பணி முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பி உள்ளார்.
அப்போது டவர் 2, மூன்றாவது மாடியில் இருந்து திடீரென பெரிய ஏசி ஒன்று திருநாவுக்கரசு தலையில் விழுந்துள்ளது. இதில் தலையில் பலமாக அடிப்பட்டதால் ரத்த வெள்ளத்தில் துடித்த திருநாவுக்கரசை உடனடியாக மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாக காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாக காவல் நிலைய போலீசார் முதற்கட்ட விசாரணையில், மூன்றாவது மாடியில் புது அறை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்ததாகவும் அப்போது ஊழியர்கள் சிலர் பணி செய்து கொண்டிருந்தபோது கவனக்குறைவாக ஏசியின் ஸ்குருவை கழட்டியதும் இதனால் இந்த விபத்து நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அஜாக்கிரதையாக செயல்பட்டு பிறருக்கு மரணம் விளைவித்தல் (304 – A) என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாக காவல் நிலைய போலீசார் யார் யார் அறை புதுப்பித்தல் பணி செய்து கொண்டிருந்தனர்? இந்த பணிக்கான காண்ட்ராக்ட் எடுத்தது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.