Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னையில் அக். 5 முதல் இவர்களுக்கு மட்டும் புறநகர் ரயில் சேவை: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னையில் வரும் 5ம் தேதி முதல் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் ரயில் சேவை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
சென்னையில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மட்டும் வரும் 5ம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. தமிழக அரசால் அங்கிகரிக்கப்பட்ட அத்தியாவசிய பயணியாளர்கள் மட்டுமே இந்த ரயிலில் பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணியாளர்களுக்காக முதலில் குறைந்த அளவில் மட்டுமே புறநகர் ரயில்கள் இயக்கப்படும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு மட்டுமே டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்து ரயிலில் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுவது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ரயில் சேவை அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், புறநகர் ரயில் சேவையை இயக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற தெற்கு ரயில்வே, அக். 5ம் தேதி முதல் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும். ரயிலில் பயணிக்கும் அத்தியாவசியப் பணியாளர்கள் அனைவரும், தமிழக அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயமாக கையில் வைத்திருக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version