Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மரியாதையும் கெளரவமும் இழந்து மண்டியிட்டு வாழும் ஆள் அல்ல நான்:விருதை திருப்பிக்கொடுத்து சேரன் சர்ச்சை!

மரியாதையும் கெளரவமும் இழந்து மண்டியிட்டு வாழும் ஆள் அல்ல நான்:விருதை திருப்பிக்கொடுத்து சேரன் சர்ச்சை!

பிஹைண்ட்வுட்ஸ் என்ற சினிமா இணையதளம் தனக்கு அளித்த ஐகான் ஆஃப் த இயர் என்ற விருதை நடிகர் சேரன் திருப்பி அளித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றி கொடி கட்டு மற்றும் பாண்டவர் பூமி ஆகிய படங்களின் மூலம் வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த சேரன் ஒரு கட்டத்தில் தன் படங்களில் தானே நடிக்க ஆரம்பித்தார். அதில் ஆட்டோகிராஃப் மற்றும் தவமாய் தவமிருந்து ஆகிய படங்கள் வெற்றி பெற்றாலும் மாயக்கண்ணாடி மற்றும் பொக்கிஷம் போன்ற படுதோல்வியை சந்தித்தன,

இதன் காரணமாக இயக்கத்தை விட்டு பிற இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் நடிப்பிலும் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை இயக்கினார். அந்த படம் பல பிரச்சனைகளால் ரிலிஸாகாமல் நேரடியாக டிவிடிகளாக வெளியிடப்பட்டது. இதையடுத்து சேரன் பிக்பாஸ் 3 யில் கலந்து கொண்டதன் மூலம் மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார்.

பிக்பாஸில் பல சர்ச்சைகளில் சிக்கி வெளியே வந்த அவருக்கு ஆன்லைன் சினிமா விமர்சன இணையதளமான பிஹைண்ட்வுட்ஸ் ஐகான் ஆஃப் த இயர் என்ற விருதை வழங்கியது. அந்த விருதை சேரன் தனது திரையுலக  குருவான கே எஸ் ரவிக்குமார் கையால் பெற்றார்.

இந்நிலையில் சேரன் நடிப்பில் ராஜாவுக்கு செக் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் பற்றி பிஹைண்ட்வுட்ஸ் இணையதளம் விமர்சனம் வெளியிடவில்லை. அதுபற்றி சேரன் கேட்டதற்கு அந்த படத்தை தங்கள் குழுவினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என சொல்லி இருக்கிறது. அதனால் அதிருப்தி அடைந்த சேரன் அந்த இணையதளம் தனக்கு வழங்கிய விருதை திருப்பி அளித்துள்ளார். மேலும் ‘தாங்கள் கொடுத்த மெடலை அனுப்பியுள்ளேன். மரியாதையும் கெளரவமும் இழந்து மண்டியிட்டு வாழும் ஆள் அல்ல நான்.. சூழ்ச்சியிலே இறையாகும் பறவையல்ல சூட்டிற்குள்ளிருந்து பிறந்துவந்த பறவை. விமர்சனம் செய்யாமல் என் திரைப்படங்களை வீழ்த்தலாம்.. என்னை வீழ்த்தமுடியாது.’ என ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

Exit mobile version