அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பதிலளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
உள்ஒதுக்கீடு தொடர்பாக பரிசீலிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்றும் இந்த ஆணையம் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில், குறைவாக சேர்வதற்கான காரணங்களை ஆய்வு செய்து, ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து பேசிய முதலமைச்சர், உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் வகையில்சட்ட முன்வடிவு விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.