பஞ்சாப் மாநிலத்தில், அரசுப் பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவருக்கும் நாளை இலவசமாக செல்போன் வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் துவக்கி வைக்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் அரசு பள்ளிகளில் பயிலும், 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இலவசமாக செல்போன் வழங்க இருப்பதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி, மாணவ, மாணவிகளுக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டத்தை முதல்வர் அமரீந்தர் சிங் நாளை துவக்கி வைக்கிறார்.
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் , செல்போன் வாங்க முடியாத ஏழை, எளிய மக்களின் கல்வி பாதிக்கப்பட்டது. மேலும், இதனால் ஏற்படும் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தவிர்க்க அம்மாநில முதல்வர் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக செல்போன் வழங்க முடிவு செய்தது. இதனைத்தொடர்ந்து இந்த திட்டத்திற்காக முதற்கட்டமாக 1.75 லட்சம் செல்போன்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு, 50 ஆயிரம் செல்போன்கள் வந்தடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏழை எளிய மாணவர்கள் பயனடைவார்கள் என மாநில அரசு கருதுகிறது.