திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு, உள்ளிட்ட சமூக விரோத சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் பலவித அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதிலும் காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு இதில் தன்னை முழுமூச்சுடன் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.
அதில் முதல் வேலையாக தமிழகத்தில் போதைப் பொருட்களின் பழக்கவழக்கத்தை அழித்தொழிக்க வேண்டும் என்று நினைத்த சைலேந்திரபாபு அதற்கான உத்தரவுகளை மாவட்ட காவல் துறைக்கும் மற்றும் போதை தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கும் பிறப்பித்தார்.
அதன்படி பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.மாநில அரசு என்னதான் நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும் ஆங்காங்கே பல தவறுகள் நடைபெறத்தான் செய்கின்றன.
அதிலும் பெண்களை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்குவது போன்ற பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.அந்த விதத்தில் விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய புகாரின் நேரில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தர முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தெரிவித்திருக்கிறார்.
அதோடு வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், டிஎஸ்பி அர்ச்சனாவிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் ஐ. ஜி அஸ்ரா கார்க் டி. ஐ.ஜி பொன்னி மேற்பார்வையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அந்த வழக்கில் முக்கிய நபரான ஹரிஹரன், மாடசாமி, ஜீவத் அகமது, உள்ளிட்ட 8 பேர் நேற்று கைது செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.