Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மழை வெள்ள பாதிப்பை பார்வையிட இன்று கன்னியாகுமரி வரும் முதலமைச்சர் ஸ்டாலின்!

கடந்த மூன்று தினங்களாக பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக, குமரி மாவட்டம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது. மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து இருக்கிறது, நூற்றுக்கும் அதிகமான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து இன்னும் வெள்ள நீர் வடியாமல் இருக்கிறது.

அதோடு ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, தென்னை போன்ற பல பயிர்கள் மழை வெள்ளத்தால் மூழ்கி இருக்கின்றன. கால்வாய்கள், குளங்கள், உள்ளிட்டவற்றில் உடைப்பு உண்டாகி இருப்பதோடு கடுமையான வெள்ளம் காரணமாக, பல சாலைகள் சேதமடைந்து இருக்கின்றன.

இதற்கு நடுவே பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், பெரியகருப்பன், உள்ளிட்டோர் செல்ல வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தார். அதனடிப்படையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், பெரியகருப்பன், போன்றோர் குமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இந்த சூழ்நிலையில், குமரிமாவட்ட வெள்ள பாதிப்பை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இதனை முன்னிட்டு சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்படும் ஸ்டாலின் காலையில் மதுரை விமான நிலையம் வந்தடைய இருக்கின்றார்.

அங்கிருந்து கார் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் அவர், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் தோவாளை பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய இருக்கின்றார். அதனை அடுத்து பேச்சிப்பாறை பகுதிக்கு சென்று அணை மற்றும் வெள்ள சேத இடங்களையும் மணவாளக்குறிச்சி, பெரியவிளை, பகுதியில் வெள்ள சேத இடங்களையும், பார்வையிட இருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து நாகர்கோவில், ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகை தரும் அவர், மதிய உணவு சாப்பிடுகிறார். அதன் பின்னர் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் வெள்ள சேதம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றார். ஆய்வுக்கூட்டம் முடிவடைந்தவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் மாலையில் கார் மூலமாக திருநெல்வேலி புறப்பட்டு செல்ல இருக்கிறார்.

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது அதோடு முதலமைச்சர் வந்து செல்லும் பகுதிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், பெரியகருப்பன், மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த் உள்ளிட்டோர் பார்வையிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version