விண்வெளி ஆராய்ச்சியில் புதியதொரு படைப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக சீனா அரசு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. சீனா அரசானது 2030 க்குள் நிலவில் பேஸ்மென்ட் அமைப்பதற்கான முழு வேலைகளையும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த மாபெரும் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் சீனா நிலவில் இருக்கும் மண்ணைப் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட செங்கற்களை எடுத்துச் செல்லும் கார்கோ ராக்கெட்டை அடுத்ததாக ஏவ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2035 ஆம் ஆண்டு நிலவில் பேஸ்மென்ட் அமைப்பதற்காக செங்கல் போன்ற மாதிரி கற்களை பூமியிலிருந்து எடுத்து செல்ல சீன விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவு செய்துள்ளது. நிலவில் உள்ள அதீத வெப்ப நிலை மற்றும் அடிக்கடி நிகழக்கூடிய நிலநடுக்கங்கள் இவற்றிற்கு இடையில் நிலவில் வீடு கட்டுவது என்பது வெறும் சவாலான காரியம். அதனை செய்து முடிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது உலகே திரும்பி பார்க்கும் வகையில் செய்வது போல் உள்ளது.
இதற்காக பூமியிலிருந்து கட்டுமான பொருட்களை நிலவுக்குக் கொண்டு செல்வது மட்டும் அல்லாமல் அதில் வெற்றி அடையப் பல முறை விண்வெளி பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதற்காக அதிகப்படியான தொகையைச் செலவு செய்யத் தயாராகியுள்ளது ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு.
வூஹானில் உள்ள Huazhong University of Science and Technology கல்லூரியின் விஞ்ஞானிகள் நிலவில் இருக்கும் மண், பூமியில் கிடைக்கும் பாசால்ட் (Basalt) தாது போன்று இருப்பதாகவும் இதை வைத்து தற்போது செங்கல் புரோட்டோடைப்-ஐ உருவாக்கியுள்ளனர்.
மேலும், இந்த செங்கல் போன்ற கற்கள் நிலவின் உடைய சீதோஷ்ண நிலைகளை தாங்குமா என்பதனை உறுதி செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி, நிலவின் உடைய வெப்பநிலை 180 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 190 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் என்பதால் இந்த சூழலுக்கு இந்த கற்கள் பொருந்துமா என அடுத்தடுத்த விண்வெளி பயணங்களில் சோதனை செய்ய உள்ளதாக சீன அரசு தெரிவித்திருக்கிறது.
ஏற்கனவே சீனா ஐந்து முறை விண்வெளிக்கு சென்று வந்த நிலையில், அதன் மூலம் பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு இந்த செங்கற்களை உருவாக்கியுள்ளது. இந்த கற்கள் நிலவின் கால நிலைக்கு பொருந்துமா என்பதனை சோதனை மூலம் கண்டறிய இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.