வங்கதேசத்தில் இன்று கரையை கடக்கிறது சிட்ரங் புயல்! தமிழக மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

0
154

வங்கக் கடலில் ஏற்பட்ட சிட்ரங் புயல் வங்கதேசத்தை நோக்கி நெருங்கி விட்டதால் தமிழ்நாடு புதுவையில் 3 தினங்களுக்கு மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது தமிழகத்தில் சில மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இன்று முதல் 3 தினங்களுக்கு மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று லேசான மேகமூட்டம் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி,தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனீ , கன்னியாகுமரி, சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் இன்று முதல் 27ஆம் தேதி வரையில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. நேற்று காலை 7:00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வங்கக் கடலில் உண்டான சிட்ரங் புயல் தீவிர புயலாக வலுப்பெற்று வங்கதேசத்தில் பிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையே கரையை கடக்கிறது புயல் காரணமாக, வங்கக்கடலின் வடக்கு பகுதி மற்றும் வங்கதேசத்தின் கடலோரம் போன்ற பகுதிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் ஆகவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தன்னுடைய செய்தி குறிப்பில் தெரிவித்திருக்கிறது.