மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை!
பள்ளிக்கல்வி துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், அரசுப் பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படியும் பள்ளி மேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டது.
அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வளர்ச்சியில் இக்குழு முக்கியப் பங்கு வகிக்கிறது. பள்ளிக் கல்வித்துறை அரசாணையின்படி, பள்ளி மேலாண்மைக் குழுவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்வது அவசியம்.
அதன்படி அனைத்து பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவை மறுகட்டமைப்பு செய்வதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம், பள்ளி மேலாண்மைக் குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச் 20ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டத்தை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் அமைப்பு, அதன் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம், பெற்றோர்களின் பங்கு மற்றும் அடுத்து நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வில் கலந்து கொள்வதின் முக்கியத்துவம் ஆகியவற்றை பெற்றோருக்கு எளிய முறையில் தலைமை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.